பயணக்குறிப்பு (Diary -)
----------------------------------------------
நீலகிரி மலையை நோக்கிய ஒரு இரண்டு நாள் பயணம். வழக்கமான சுற்றுலாவாக அல்ல இது உள்ளே உள்ளே பல கிராமங்களை நோக்கி செல்லும் அரிய வாய்ப்பு! மாதத்தில் ஒரு முறை எனக்கு கிடைத்த வாய்ப்பு.! மலையேறத்திணறிய வாகனங்களில் எங்களுடையதும் ஒன்று. என்னுடன் டிரைவர் தவிர சக பணியாளர் தோழி ஒருவரும் உடன் இருந்தார்., மேலே செல்லச்செல்ல காரின் கண்ணாடியை நன்கு இறக்கி விடுகிறேன்... ''போதும் மேடம் குளிர் ஜாஸ்தியாகிவிடும்,"என்று சொன்ன அந்த தோழியை குழந்தையைப் பார்ப்பது போல பார்த்து சிரித்துக்கொண்டேன்! வழிநெடுகிலும் யார் கண்ணிலும் அதிகம் பட்டுவிடாத காட்டுமலர்கள்.. கண்டும் காணாமல் போகச்சொல்லியது. வானளாவிய மரங்களோ... இன்னும் வளரவா... இல்லை வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு தளரவா என்று கேட்பது போல மெல்லிய தலையாட்டல்கள், எல்லாம் கடந்து உதகை பேருந்து நிலையம் முன்பாக வண்டியை நிறுத்தி விட்டு உண்மையான தேநீர் தேவைமிர்தமாய் இருந்தது. மிக குறைந்த சர்க்கரையில் பால் இல்லாமல் ஒரு துவர்ப்பும், சூடுமாக பருகும் என் உச்சந்தலையில் பூ பூக்க செய்தது! இன்னும் உள்ளே உள்ளே செல்கிறோம்.. பல வீடுகளை நோக்கிய பயணமிது.. ஆங்காங்கே இந்நிறுவனத்தின் முகவர் இருப்பார்கள் அவர்களை அந்தந்த பகுதியில் சந்தித்து அவர்களின் இலக்கு பற்றி விவாதித்து அவர்கள் உறவு /நட்பு வட்டத்தை சந்தித்து சேமிக்க வைக்க வேண்டும். அப்படியாக பதினைந்து பேரை சந்திக்க திட்டமிட்டு கடைசியில் 7பேரை சந்தித்து முடிக்க இரவு 9மணியாகிவிட்டது. அசதி அதிகமாகிவிட்டது! இரவு தங்கலுக்கு அங்கேயே ஒரு சகபணியாளர் தோழி வீட்டிற்கு சென்றோம். பனியில் பற்கள் தட்டச்சு செய்கிறது... எப்படியெல்லாம்மோ இறுக்கம் காட்டி பார்க்கிறேன்... மீண்டும் தோற்கிறேன் இயற்கை அன்னையிடம்!
மனிதர்கள் அத்தனை எதார்த்தவாதிகள், அத்தனை பாசக்காரர்கள் எங்கு சென்றாலும் அன்பான உபசரிப்பு மிகவும் ஏழ்மையில் இருந்தாலும் பர்னிச்சர் வசதிகளை தாராளமாக வைத்துக்கொண்டிருந்தார்கள், குளிரில் தரையில் உட்காருதல் சௌகர்யமல்ல ஆதலால்!. ஒரு மெல்லிய இருட்டு எல்லோர் வீட்டிலுமே உணர்ந்தேன்.., காரணம் மஞ்சள் நிற குண்டு பல்பு! ஏன்... ட்யூப்லைட் போடலாமே என்றேன்... இல்லை இது கொஞ்சம் சூடு தருகிறது என்றார்கள்!
சீசனுக்கான வியாபாரிகள் காத்திருக்கிறார்கள், அங்கு சுற்றிப்பார்க்க வருபவர்களை Guest என்றுதான் சொல்கிறார்கள், தோழியின் வீட்டில் உறங்குவதற்கு நல்ல ஏற்பாடு செய்து தந்தார்கள்.
விடியலில் காற்றும் மழையுமாக இருந்தது என்னால் கட்டிலை விட்டு கீழே இறங்க முடியுமா என்பதே பெரும் சவாலாக இருந்தது. யாருமே எழுந்திருத்திருக்க மாட்டார்கள், இந்நேரத்தில் இங்கே 6மணிக்கு எழுந்த அதிபுத்திசாலி என அசட்டுத்தனமாக நினைக்கிறேன், ஆனால் அந்த ஊர்க்கார தோழி எழுந்து எங்களுக்கு வெந்நீர் போட்டுவிட்டு சூடாக தேநீர் வைத்துவிட்டு, அன்றைய நாளில் எங்கு செல்வது என்பதை குறித்த விபரங்களை ஒரு தாளில் எழுதிக்கொண்டு இருந்தார். எனக்கோ ஆச்சரியம்!வெளியே சென்றால் அங்கே பெரும்பாலானோர் வீடுகளில் பூந்தோட்டம் காண முடிந்தது! தெருவில் நடந்து சென்ற அனைவரும் எங்களைப்பற்றிய விசாரணைகளை (plains இல இருந்து வந்திருக்கிறார்களா...... எங்கள் முகமே காட்டிக்கொடுத்து விடுமே.....) தோழியிடம் கேட்டு விட்டு "நம்ப வீட்டுக்கு வாங்கோ" என்று அன்பான அழைப்பை உதிர்த்தார்கள்.,
அந்த மழையிலும், பனியிலும் அவர்கள் பணியை செவ்வனே செய்கிறார்கள், எனக்கோ என் சோம்பேறி மூளையின் கண்கள் விசாலமாக திறக்கின்றன!! அன்றாட வாழ்வே பெரும் சவால்தான் அங்கே..... 'இத்தனை பேருந்து தான் வரும் இத்தனை மணிக்குத்தான் வரும்' இன்னும் பல கிராமங்களில் பயணங்கள் பெரும் சவாலாகத்தான் இருக்கிறது.
நாம் சமவெளியில் இருப்பது போல சட்டென்று கிளம்பி ஒரு மருத்துவமனையை அடைய கூட சிரமம் இருக்கிறது, அவ்வப்போது இயற்கை தாயின் பொறுக்க முடியாத சீற்றங்களில் சிக்கி வெளியேறுகிறார்கள்............ (ரொம்ப கஷ்டம் சுருக்கி விட்டேன்) ஆனால் இவற்றை மிகச்சாதாரணமாக கடந்து செல்கிறார்கள்....
நாமோ இங்கே சமவெளியில் இருந்து 5நிமிடத்திற்கு ஒரு பேருந்து, வாகன வசதிகள் இருந்தும் பெரிய முயற்சிகள் எடுக்கத்தவறி... நேர விரயம் செய்கிறோம்...... கிடைத்த இத்தனை வாய்ப்புகளுக்கும் பகவானிடம் நன்றி செல்ல மறு(ற)க்கிறோம்!........... சுகமான குளியல், கிளம்புகிறோம்,
குண்டு அரிசி, சூடான சாதம் பீட்ரூட் சாம்பார் (இங்கு தான் தெரிந்து கொண்டேன் பீட்ரூட் பொரியலுக்கு மட்டுமல்ல... ஹா ஹா ஒரு ஞானம்!) காரம் சேர்க்கப்பட்ட உணவு! "முட்டி வலிக்காது மேடம்.... இங்கே நடக்குறதுக்கு தெம்பு வேணுமில்லே..... சாப்டுங்கோ"... இந்த அன்பான உபசரணை காரம் மறந்து உண்ணச்செய்தது! (கண்களில் நீர்....!!! அன்பின் நெகிழ்வால்)
எல்லாரையும் சந்தித்துவிட்டு மேலும் கீழுமான வீடுகளை கால்களாலே கடந்து களைப்பேறிய உடலும், உண்மை அன்பர்களை தரிசித்த மனமுமாய் விடைபெறுகிறேன்.... எனக்கே தெரியாமல் காரில் கூடை கூடையாய் காரட்டுகள்!! டிரைவரை பார்த்தால் அவர் பதறிப்போய் வெளியே நிற்பவர்களை பார்க்கிறார், "சொன்னா வேணாம்ன்னு சொல்லிடுவிங்கோ.... அன்பா தர்றோம் புது காய்கள்.... வீட்டுக்கு கொண்டுபோங்கோ..... பாப்பா, சாரு, அம்மா எல்லாரையும் விசாரிச்சம்முன்னு சொல்லுங்கோ... அடுத்து சுத்திப்பாக்க சீசனுக்கு குடும்பத்தோட வந்துருங்க... வெளியே தங்கக்கூடாது" என்று சொல்லி வழியனுப்பிவைத்தவர்கள்... புதியவர்களா இவர்கள்?! ஒரு நாள் பழக்கத்தில் இத்தனை அன்பை கொட்டுகிறார்களே.... இவர்கள் பிறவிகள் தோறும் பல பெயர்களில் என்னுடன் வாழ்ந்திருக்கக்கூடும், நினைத்தவாறே வண்டி கிளம்புகிறது.....
"சிந்தை மிகு மகுடி முன்னாலே நாகத்தை போல எந்தன் மனம் ஆடக்கண்டேன் இன்பத்தினாலே "...... பாடலை சற்று சப்தம் அதிகம் வைத்தபடி உருள்கிறது வண்டி!
வீட்டிற்கு வந்து அக்கம்பக்கத்தில் பிரித்து கொடுத்தது போக சமைத்து ருசித்த காரட் இன்னும் இனிக்கிறது.................. (தொடர்வேன்) இப்படிக்கு உங்கள் தோழி வி.சாந்தி
சனி, 11 ஆகஸ்ட், 2018
பயணமும் அனுபவமும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
எங்கே செல்கிறோம்?
நாம் பள்ளி சென்ற காலத்தில் அதிக அளவில் தொலைக்காட்சி காட்சிகள் கூட பார்த்தது இல்லை... வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் மட்டும் தான் ஒர...
-
கடந்த காலம் காணாமல் போனது எதிர்காலம் எதிர்பார்ப்பில் இருக்கிறது நிகழ்காலம் நிஜமாய் நிற்கிறது புன்னகை பூத்து புத்துணர்வுடன் எழுந்து வா......
-
இந்த நாள் மட்டுமல்லாது இனி வரும் எல்லா நாட்களிலும்... வெற்றி நமதே இப்போதில் இருந்து நேர்மறையாக (positive) சிந்தித்தால்! இனிய காலை வணக்...
-
கடவுளைத் தேடி…. ~~~~~~~~~~~~~ ஷவரில் தலை அலசி குளித்த உடம்பு, கங்கையில் இறங்கி கும்மாளம் போட்டது. பத்து பாக்கெட்டுகள் பிஸ்கெட் வாங்கி அதை...