சுவர் நல்லது
வியாழன், 24 மே, 2018
சனி, 19 மே, 2018
வெள்ளி, 18 மே, 2018
அவமானம் தாங்குவது எப்படி
அவமானம் தாங்கப் பழகு
எழுத்துச்சித்தர்
பாலகுமாரன்
"வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்து கொள்ள தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது. வெற்றி என்றதும் பிறரால் அவமானப்படுத்துவது என்பதும் வரும். இது மிகப்பெரிய பாடங்களை நமக்கு சொல்லிக்கொடுத்துவிடும்.
அடுத்தவரின் உண்மையான முகம் நாம் அவமானப்படும்போது தெரியும்.
யார் நண்பர் யார் நண்பர் அல்லாதார். யார் நல்லவர், யார் கெட்டவர், அவருடைய உண்மையான முகம் எது? என்ற விஷயங்களெல்லாம் மிகத் தெள்ளத்தெளிவாகத் தெரியும்.
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்துதலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளை பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகு வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.
நம்மை அவமானப்படுத்த செயல்படும் பலபேர் இவைகளை மிக ரகசியமாகவே செய்கிறார்கள். வேறு யாரையாவது முன்னிறுத்தி பின்னால் நின்று இயக்குகிறார்கள்.
இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வு கண்டு பொறாமைப் படத்தொடங்குகிறார்கள்.
அநேகமாக அவர்கள் பொறாமை மிகுதியால் அவமானப் படுத்துகிறார்கள். எப்போதும் வாழ்க்கையில் நம்முடைய சுற்றம் தான் எதிரிகள். எதிரிகள் என்று எவரும் தனியாக உருவாவது இல்லை.
என்கூட பம்பாயில் பிளாட்பாரத்துல வியாபாரம் பண்ணிட்டு இன்னிக்கு ஒரு கடைக்கு முதலாளியாயிட்டா விட்டுருவோமா? உதைப்போம். உன்னப் போய் முதலாளின்னு கூபிடுறாங்களே எனக்கு வயிறு எரியுது என்று சண்டை போட்ட மனிதர்களை நான் அறிவேன்.
கடைக்கு முதலாளி ஆனவனுடைய உழைப்பும் கம்பீரமான காத்திருத்தலும் பிளாட்பாரத்தில் விவரம் கெட்டத்தனமாய் அலைகிறவனுக்குப் புரியவில்லை.
நன்றாக வளர்ந்த பிறகும் ஒரு வம்பு சண்டைக்காரனுடன் மல்லுக்கு நிற்க வேண்டியது இருக்கிறது. அதை வேடிக்கை பார்க்கும் நாலு பேருக்கு பதில் சொல்ல வேண்டியது இருக்கிறது.
ஆனால் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். இம்மாதிரியான மனிதர்களை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்த அவமானத்திற்கு பயந்து விடக் கூடாது.
என்ன செய்ய வேண்டும் ?
கோபப்படவேண்டும் நிதானமாகக் கோபப்பட வேண்டும்.
பாரதி ரௌத்திரம் பழகு என்று சொல்கிறார். ரௌத்திரம் என்ற வட சொல்லுக்கு வெஞ்சினம் என்று பொருள் கொள்ளலாம்.
வெறும் சினம் அல்ல. மிகக் கடுமையான சினம். காரியமாற்றும் சினம். பதிலுக்கு என்ன செய்வது என்று திட்டமிட்டு அவமானம் செய்தலை எதிர்க்கும் சினம்.
அவமானம் நண்பர்களால் ஏற்பட்டாலும் உறவுகளால் ஏற்பட்டாலும் அந்நியர்களால் ஏற்பட்டாலும் நெல்முனையளவும் கவலை கொள்ளாதீர்கள்.
எதனால் இது ? எங்கு தவறு ? வேண்டுமென்றே செய்யப்படுகிறதா? அல்லது விவரமில்லாத விஷயமா ? என்பதை யோசித்து மிக வேகமாக ஒரு முடிவு எடுங்கள்.
எதிர்க்க முடியாத சூழலில் எதிர்ப்பைக் காட்ட முடியாத நிலையில் கூட உங்களுக்கு கடும் அவமானம் ஏற்படும். அப்போது அவமானத்தை நன்கு அனுபவியுங்கள். அவமானப்படுத்துதலை புரிந்து கொண்டு அதற்கு அழாது கண்ணீர்விட்டு கதறாது உள்ளே இறுக்கிக் கொள்ளுங்கள்.
உங்களை அவமானப் படுத்தியவரை ஒரு போதும் மன்னிக்காதீர்கள். மஹா கவி பாரதியின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.
"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா "
அவருக்கு எதிரே வெற்றி பெற்று சிரித்து சிலாகித்து நில்லுங்கள். அவர் தானாகக் குன்றிப் போவார்.
அவருக்கு முன் ஜெயித்து நலமா ? என்று விசாரியுங்கள் அவர் மனம் உடனே செத்துப் போகும்.
பழி வாங்குதலில் மிகச் சிறந்த விஷயம் நீங்கள் திரும்ப திரும்ப வெற்றி காண்பதே.
வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் அவமானப்படுங்கள் அவமானத்திற்கு அஞ்சாதீர்கள். அவமானம் ஒரு உரம், கடுமையான உரம், காரமான உரம். அதனாலென்ன உரம் தானே ? "
எழுத்து சித்தர் பாலகுமாரன்
வியாழன், 17 மே, 2018
தன்னம்பிக்கை /சுயதொழில்
ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து மிஸ்டர் எக்ஸ்ஸுக்கு தபாலில்இன்டர்வ்யூ வந்திருந்தது. இன்டர்வ்யூக்கு சென்ற அவரிடம் சில கேள்விகள் கேட்டார்கள். அவர் சரியாகப் பதில் சொன்னதும் அவரை வேலைக்கு தேர்வானதாகத் தெரிவித்து அவரது email-idஐ தெரிவித்தால் நியமன ஆணையை அனுப்புவதாகச் சொன்னார்கள். மிஸ்டர் எக்ஸ்ஸுக்கோ ஈமெயில் என்ன என்றாலே தெரியாது என்று சொல்லிவிட்டார். எனவே அந்த வேலை கிடைக்கவில்லை. வெளியே வந்த எக்ஸிடம் இருந்த கொஞ்சம் பணத்தை முதலீடு செய்து தக்காளி வாங்கினார். அந்த சமயத்தில் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் விற்பனை செய்து கணிசமான லாபம் ஈட்டினார். இதே போல பல தொழில்கள் துவங்கி தொழிலதிபர் ஆனார். ஏகப்பட்ட கம்பெனிகள், கார்கள் என வாங்கினார். அவற்றை இன்ஸ்யூர் செய்ய ஏற்கனவே இவருக்கு வேலை கொடுக்க
இன்டர்வ்யூ செய்த கம்பெனிக்குப் போனார். அங்கு சென்ற அவரிடம் உங்களுக்கு ஈமெயில் மூகவரி இருந்தால் இங்கு வேலை கிடைத்திருக்குமே என்றார்கள். இவர் சொன்னார், எனக்கு இங்கு வேலை கிடைத்திருந்தால் உங்களில் ஒருவனாக இருந்திருப்பேன். ஆனால் இப்போது உங்களைப் போல் நூற்றுக் கணக்கான பேருக்கு வேலை கொடுத்திருக்கிறேன் என்றார்.
புதன், 16 மே, 2018
வெற்றி நிச்சயம்
வெற்றியை
எதிர்பார்த்துக்கொண்டே
இரு...
மனதை சுத்தமாக வை
உன்னை உனக்கு பிடிக்குமாறு
பார்த்துக்கொள்
ஓயாமல் முயற்சி செய்
முடியவில்லையா
மனதில் தினம் பயிற்சி செய்
வெற்றி நிச்சயம்!
- வி.சாந்தி
உற்சாகம்
வெறுமனே உற்சாகமாக
இருப்பதற்கு
பத்து பைசா கூட
தேவையில்லை
ஆனால் தொடர்ந்து
இந்த உற்சாகத்தை
மட்டும் பின்பற்றி பார்
கோடிகளும் காலடியில்!
நம்புவதற்கும் கொஞ்சம்
நம்பிக்கை வேண்டும்
நம்பிப் பார்...
வெற்றி நிச்சயம்!
- வி.சாந்தி
தன்னம்பிக்கை வெற்றி நிச்சயம்
திறமை நிறைந்த உலகில்
தினம் புலம்பி
என்ன செய்ய போகிறாய்,?
கொள்ளை திறமைகளை
உள்ளே மறைத்து
உண்மை அறிந்தும்
ஊமையாக நிற்பாயோ,?
செயல்கள் உனதாகும்
பலன்கள் உனக்கேயாகும்!
விடியலுக்கு காத்திருந்தாய்
விடிந்தபின்னும் கண்மூடலா?
நாளை உனதாகும்
நம்பிக்கை உள்ளிருந்தால்
இன்றை இனிதாக்கு!
இயலாததென்று ஏதுமில்லை
நீ இறைவனின் அம்சமாதலால்!
விழி! விழி! விழி!!!
வெற்றி நிச்சயம்!
- வி.சாந்தி.
எழுத்து சித்தர் பாலகுமாரன்
சிகரெட் பிடிப்பதை விடுங்கள்,,,
எழுத்துச்சித்தர் பாலகுமாரனின்
அனுபவ பாடம்...!
இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை.
சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலாக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன்.
நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவிட்டால் வேறென்ன நடக்கும்?
நிகோடின் என்பது வெறும் புகையல்ல. அதுவொரு போதையான ரசாயனம். அது என்ன செய்யும்?
கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம் தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது. ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி எல்லா இடங்களிலும் ஒரு அமைதி படர்கிறது. கண் கிறக்கமான ஒரு நிலைமை ஏற்படுகிறது.
இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
உதவியும் செய்தது. என்ன உதவி?
சுற்றுப்புறம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் எத்தனை இரைச்சல் இருந்தாலும் உள்ளடங்கி ஆழ்மனதில் அமிழ்ந்து சிந்திக்க சிகரெட் உதவி செய்வதாக நினைத்துக் கொண்டேன்.
அப்படி சிந்திப்பதால்தான் கதை எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.
காலை, மாலை, இரவு என்று எல்லா நேரங்களிலும் சிகரெட் வேண்டியிருந்தது. சிகரெட் பிடிப்பதற்காகவே பலமணி நேரம் கூட்டங்களில் உட்காருவதை தவிர்த்தேன். அரை மணிக்குமேல் யாரோடும் அமர்ந்து அமைதியாக பேச முடியவில்லை.
வெகு விரைவாக சாப்பிட்டு விடுவேன். குழம்பு சாதம் நாலு கவளம், தயிர் சாதம் நாலு கவளம் மடமடவென்று சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைந்ததும் வெளியே யோய் ஒரு சிகரெட் பற்ற வைத்து புகை இழுத்தால்தான் சாப்பிடதன் நிறைவு பூர்த்தியாகும்.
இது மிகமிக கேவலமான நிலைமை. ஆரோக்ய குறைவான சிந்தனை. உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தை அறுத்தெறிகின்ற மிகப்பெரிய காரியம்.
பத்தொன்பது வயதில் தொடங்கிய சிகரெட் பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து நாற்பத்தைந்தாவது வயதில் உச்சகட்டத்தை அடைந்தது. இழுத்து இழுத்து புகையை உள்வாங்கியதால் புகை நுரையீரலுக்கு மட்டுமல்லாது இரைப்பைக்கும் போயிற்று. இரைப்பையில் புகை தங்கி மேல் வயிறு பெரிதானது. மேல் வயிறு பெரிதாக இருந்ததால் நடக்கும்போது மூச்சு வாங்கியது. மாடிப்படி ஏறும்போது சிரமமாக இருந்தது.
எது பற்றியும் கவலைப்படாமல் இடையறாமல் சிகரெட் பிடித்தபடி இருந்தேன். என் வீட்டிலுள்ளவர்கள் ‘இவனை மாற்ற முடியாது’ என்று கைகழுவி என் போக்கிலேயே விட்டார்கள். நிச்சயம் ஒருநாள் நீங்களாக விட்டுவிடுவீர்கள் என்றும் சொன்னார்கள்.
அது நேர்ந்தது.
திருமணத்திற்காக ஒரு மகள் இருக்கிறாள். வளர்ந்து படிக்க வேண்டிய ஒரு மகன் இருக்கிறான். இருந்தும் கவலையின்றி இத்தனை செலவு செய்கிறோமே, உடம்பு பாழாகிறதே என்று கவலைப்பட்டு என் குருநாதரை மனமுருக வேண்டி இந்த சிகரெட்தான் கடைசி என்று சொல்லி ஒரு பாக்கெட் சிகரெட் முழுவதும் வீட்டு வாசலில் நின்றே அமைதியாக பிடித்து முடித்த பிறகு அந்த பெட்டியை கசக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தேன்.
மறுநாளிலிருந்து சிகரெட் பிடிக்கவில்லை.
முதல் ஒரு மணி நேரம் தவிப்பாக இருந்தது. பல் கடித்து பொறுத்துக் கொண்டேன். இன்னும் அரை மணி… இன்னும் அரைமணி… என்று தள்ளிப் போட்டேன். அரை நாள் சிகரெட் பிடிக்காமல் இருந்தது ஆரோக்யமாக தெரிந்தது.
அன்று முழுவதும் பிடிக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்தேன். இருந்தேன். நெஞ்சு விசாலமானது. அதற்கு பிறகு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் சிகரெட் பிடிக்கவில்லை.
நான்காவது நாள் சிகரெட் தேவைப்படவில்லை.
நடுவே ஒரு சிகரெட் பிடித்திருந்தாலும் கால் இடறி மறுபடியும் புகைக்குழியில் விழுந்திருப்பேன். முற்றிலும் மாறுபட்ட மனிதனாக,நன்கு சுவாசிக்கிறவனாக, மற்றவர்கள் சிகரெட் பிடித்தால் மூக்கை பொத்திக் கொள்பவனாக மாறினேன்.
ஆனால் என்ன, செய்த பாவங்கள் விடுமா?
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் ஆபரேஷன் செய்து கொண்டேன்.
அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட்டை நிறுத்தி ஆரோக்யத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது.
பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது.
இரண்டாயிரத்து பதினொன்றில் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன்.
சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.
ஆனால், இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.
நுரையீரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
ஒருபிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை வேகமாக செலுத்தினால்தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை.
என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்ற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்துகொண்டார்கள்.
இதை எப்படி சரி செய்வது?
வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது.
மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.
வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்பொழுதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும்படி ஒரு அவஸ்தை.
ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத் தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும்படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை. ஜூரம் இல்லை. ஆனால், ஆக்சிஜன் குழாயை எடுத்துவிட்டால் மூச்சுத்திணற ஆரம்பிக்கும்.
அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது, உண்ண முடியாது, எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்ததுபோன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.
ஒருநாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக்கொண்டேன். அப்படி புகைத்தால்தான் கதை எழுத வரும் என்று முட்டாள்தனமாக நம்பியதை நொந்து கொண்டேன்.
மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சு திணறி இதோ… இதோ… என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது.
நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பரவாயில்லை.
மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல், வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது.
சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்.
சிகரெட் பிடிப்பவர்கள் உடனடியாக அந்த பழக்கத்தை கைவிடுங்கள்.
சிகரெட் உங்களை இன்றல்ல… பிற்பாடு ஒருநாள் மிக நிதானமாக கொல்லுகின்ற ஒரு விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த இருமல், இந்த முதுகு குனியல், இந்த தளர்வு, இந்த வேதனையெல்லாம் சிகரெட் பிடிப்பதால் விரைவாக ஒரு மனிதனுக்கு வரும்.
நல்லபடியாக சுவாசம் செய்து கொண்டிருந்தால் எழுபத்தைந்து வயது வரை ஆரோக்யமாக நிச்சயம் இருக்கலாம். அறுபத்தாறு வயதில் தள்ளாடுகின்ற நிலைமை & எழுத முடியாத நிலைமை & பேச முடியாத நிலைமை & ஒரு மனிதனுக்கு வருகிறதென்றால் அது வேதனைக்குரியது.
அது தவிர எந்நேரமும் நம்மைச் சுற்றி தாங்கும்படியாக நம் உறவினர்களுக்கு நாம் சுமையாக இருக்கிறோம் என்பது இன்னும் இம்சையான விஷயம்.
வீட்டிலுள்ள முக்கியமான ஒரு நபர் நோய்வாய்ப்பட்டால் அந்த வீடே நோய்வாய்ப்படும். எனவே எது விஷமோ, எது மிக கொடூரமாக நம்மை தாக்குமோ அதிலிருந்து நாம் விலகி நிற்க வேண்டும்.
புகை பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல, உங்கள் குடும்பத்திற்கு தீங்கானது. உங்கள் வாழ்க்கையை சிதறடிக்கப் போவது. உங்கள் வளர்ச்சியை அறுத்தெறியப் போவது. உங்கள் ஞானத்தை பொசுக்கப் போவது.
எனவே, சிகரெட்டை மனதாலும் நினையாமல் நன்கு மூச்சு இழுத்து வெளியே விடுகின்ற பிராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள். சிகரெட் ஆசையே வராது.
நான் விட்ட பிறகும்.. அது விடவில்லையே…
பாலகுமாரன்.
மன அழுத்தம் ஆறுதல்
எத்தனை தெளிவாக
அன்னார்ந்து பார்த்து கொண்டாலும்
கீழே விழுந்து விடுகிறதே கண்ணீர்!
உப்பும் ஒரு சுவைதானே இருந்து விட்டு போகட்டும்!
வி.சாந்தி
காலை வணக்கம்
இந்த நாள் மட்டுமல்லாது
இனி வரும் எல்லா
நாட்களிலும்...
வெற்றி நமதே
இப்போதில் இருந்து
நேர்மறையாக (positive) சிந்தித்தால்!
இனிய காலை வணக்கம்
இந்த நாள் இனிய நாளாகட்டும்
பாலகுமாரன் சிந்தனை வரிகள்
கடவுளைத் தேடி….
~~~~~~~~~~~~~
ஷவரில் தலை அலசி குளித்த உடம்பு, கங்கையில் இறங்கி கும்மாளம் போட்டது.
பத்து பாக்கெட்டுகள் பிஸ்கெட் வாங்கி அதை சாதுக்களுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடு போனேன். சாதுக்கள் யாரும் பிஸ்கெட்டை லட்சியம் செய்யவில்லை.
சிறுவர்கள்தான் வாங்கிக்கொண்டு போனார்கள். அதில் ஒரு சிறுவன் பிஸ்கெட்டுகளைப் பிரித்து நாய்களுக்கு வினியோகித்தான். தானம் யாருக்கு செய்தால் என்ன. எல்லாமும் சாதுக்களே என்பதுபோல உணர்வு வந்தது.
கங்கைக் கரையிலேயே வாழ்ந்து, அங்கேயே இறந்துபோக ஆசைப்பட்டு, அவ்விதம் இறந்தவர்களை தகனம் செய்யும் இடம் பற்றி கேள்விப்பட்டிருந்தேன்.
அங்கு போகும் ஆசை வந்தது.....
கருப்பு வெள்ளைப் புகை. பிண நாற்றம். பல்வேறு சிதைகள். அங்கு இரண்டு தகதகத்துக் கொண்டிருந்தன. ஒன்று கனன்றுகொண்டிருந்தது. மற்ற மூன்றும் அமைதியாகி அடங்கிக் கிடந்தது. அதிலிருந்து அதிகம் புகை வந்தது.
தெருவின் விளிம்பிலிருந்து பிணங்கள் எரிவதைப் பார்க்கமுடிந்தது. விறகுக் கட்டைகள் மாட்டு வண்டியில் வந்து இறங்கின. கைமாற்றிக் கொண்டுபோய் அடுக்கி வைத்தார்கள்.
ஏதோ ஒரு புதிய பிணம் வர, இறக்கச் சொல்லி தூக்கி வந்தவரிடம் காசு வாங்கினார்கள். பிறகு சிதை தயாரித்தார்கள். வயதான ஆணின் பிணம் சிதைமீது வைக்கப்பட்டது. அதன்மீதும் விறகுகள் வைக்கப்பட்டது.
“ராம் நாம் சத்யஹ‘ என்பது இடையறாத வாக்கியமாக இருந்தது. எது விசாரிக்கப்பட முடியாத ஒரு விஷயமோ, எது விளங்காத ஒரு விஷயமோ, எது நம்மை ஆளுமை செய்கிறதோ, எந்த சக்தி நம்மீது படர்ந்து நம்மை இயங்க வைக்கிறதோ அதுவே சத்தியம்.
நானும் இறங்கி அந்த அடுக்கிய சிதைமீது வைத்திருந்த பிணத்தை உற்றுப் பார்த்து, அதன் காலைத் தடவி தலையில் வைத்துக் கொண்டு “போய் வாரும்’ என்று சொல்லி, “ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ‘ என்று அரற்றினேன்.
காலெல்லாம் சுடுகாட்டுப் புழுதி. எங்கோ உட்கார வேட்டியிலும் கருப்பு. பிணவாடை பழகிவிட்டது. முகத்திலும் புகை படிந்திருக்க வேண்டும். கங்கையில் குளித்த தலைமுடி சடையாகத்தான் இருந்தது. பரட்டையாகத்தான் கிடந்தது.
ஆண் நண்பரின் சிதைக்கு தீ வைக்கப்பட்டது. நான் கைகூப்பி வணங்கினேன்.
கண்கள் கலங்கின. எனக்கென்னவோ யாருக்காவது சமஸ்காரம் செய்யவேண் டும் என்ற எண்ணம் இருந்தது.
அரைமணியில் இன்னொரு சடலம் வந்தது. அது பெண். எண்பது வயதிற்குமேல் இருக்கும். மழித்த தலை. பொக்கை வாய். சுருங்கி கோணலான கால்கள். சுருக்கமான தோல் உடம்பு. வற்றிய முலை. மார்பெலும்பு. நெற்றியில் சந்தனக் கீற்று. வட இந்திய விதவையாக இருக்கக்கூடும்.
அந்த சிதை உரிமையாளருக்கு கொஞ்சம் ஆங்கிலம் புரிந்தது. “சமஸ்காரம் நான் செய்கிறேன்’ என்று கேட்டதற்கு அவன் நான்கு விரல்களை நீட்டினான்.
எனக்குப் புரியவில்லை. விரலை சுண்டிக் காட்டினான். அந்த சமஸ்காரம் செய்வதற்கு நான் காசு கொடுக்கவேண்டும் என்று சொல்ல, இடுப்பு பெல்ட்டிலிருந்து நாநூறு ரூபாய் காசு எடுத்து அவனுக்குக் கொடுத்தேன். பையை ஓரம் வைத்தேன்.
ஒரு அந்தணர் வந்தார். அவருக்கு அவன் இருநூறு ரூபாய் கொடுத்தான். அவர் என் கையில் கண்டங்கத்திரி நூலைக் கட்டினார். பிரேதத்தின் நோய் என்னைத் தாக்காமல் இருப்பதற்காக அப்படி செய்வது வழக்கம் என்பது எனக்குத் தெரியும்.
நான் தர்ப்பை வளையத்தை கையில் தரித்துக்கொண்டேன். தர்ப்பைப் புல்லை இடுக்கிக்கொண்டேன். உட்கார்ந்து காலின்கீழ் தர்ப்பையை போட்டுக்கொண்டேன்.
அவர் சொன்ன மந்திரங்கள் எனக்குப் புரிந்தன. அந்த மந்திரங்கள் ஒரு நாவலுக்காக நான் திரும்பத் திரும்ப படித்து மனதில் ஏற்றிக்கொண்டவை.
ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன அர்த்தம் என்று தெளிவாகத் தெரியும். இதுபற்றி பேசியும் நான் அறிந்திருக்கிறேன். என் தந்தை இறந்தபோது இந்த மந்திரங்களைச் சொல்லி, அர்த்தம் கேட்டு மனதில் பதியவைத்தேன். இதுபற்றி எழுதியும் இருக்கிறேன்.
எனவே இது அர்த்தமற்ற ஒரு விஷயமாக எனக்கில்லை. “ஏஷான்ன மாதா ந பிதா ந பந்துகு ந அன்னிய கோத்ரக'' என்ற மந்திரத்தின் அர்த்தம் எனக்குத் தெரியும்.....
“இந்த பிரேதமானது எனக்கு தாயாக, தந்தையாக, உறவினராக, என் வர்க்கத்தினராக இல்லாதுபோனாலும், இதன் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு திருப்தியத திருப்தியத திருப்தியத’' என்று கட்டை விரல் வழியே மறித்து நீர் வார்த்தேன்.
நான் சொல்வதைக் கேட்டு அந்த அந்தணர் 'அட!' என்று வியந்தார். தமிழர்கள் கெட்டிக்காரர்கள் என்று தன் நெற்றியை சுட்டிக்காட்டினார். நான் நீர்க்குடத்தோடு அந்த அம்மையாரை வலம் வந்தேன். பானையை உடைத்து தரையில் வீசினேன்.
வாயில் அரிசி போட்டேன். முன் நெற்றியை அவர் பாதத்தில் வைத்துக்கொண்டேன்.
“அம்மா, நீ எந்த ஜென்மத்தில் என் தாயோ, எந்த ஜென்மத்தில் என் சகோதரியோ எனக்குத் தெரியவில்லை. என் தாயே, உன் உள்ளம் குளிர மந்திர ஜெபம் சொல்லி, சிவ நாமம் சொல்லி, விஷ்ணு நாமம் சொல்லி உன்னை கரையேற்றுகின்றேன்’ என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
அந்த பிணம் வைக்கின்ற ஆள், “இறந்தவர்கள் இங்கு உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்’ என்று சொன்னான்.
எல்லாரும் என் முகத்தையே பார்த்தார்கள்.
“இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன் கழல் தொழுதெழுவேன் கடலினில் அமுதொடு கலந்த நஞ்சை மிடரினுள் அடக்கிய வேதியனே’' என்று பாட, என்னை அறியாமல் என் கண்களில் நீர் வழிந்தது.
“தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்களென்றும் நோயே பட்டொழிந்தேன் உன்னை காண்பதோர் ஆசையினால் வேயே பூம்பொழில் சூழ் கனமாமலை வேங்கடவா நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆளென்னை கொண்டருளே’' என்று அந்த அம்மையாரின் சார்பாக நான் பாட, அங்குள்ளவர்கள் தலையை அசைத்து ரசித்தார்கள்.
அவர்களுக்கு அர்த்தம் புரியவில்லை. ஆனால் பாட்டின் இனிமை புரிந்தது. நெய்யில் தோய்த்து பற்றி எரியும் கொள்ளிக்கட்டையை அந்த சிதைக்கு அடியில் சொருகினேன். சுற்றிலும் நெய் வார்த்தேன்.
“பற்றே ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன் மற்றே ஒன்றறியேன் எங்கள் மாயனே மாதவனே’' என்று மனசு அலற பாடினேன்.
“ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ, ராம் நாம் சத்யஹ‘'.
சிதை பற்றிக்கொண்டது. பச்சென்று மேலே எழுந்தது. உலர்ந்த கட்டைகள், நிறைய நெய், கோடை காற்று. சிதை திகுதிகுத்து எழுந்தது.
''போ. போ போ.'' விரட்டினார்கள்.
நான் மேலேறி, வேறு பக்கம் படியிறங்கி முங்கி முங்கி கங்கை நீரில் குளித்தேன். இரண்டு கைகளிலும் நீர் எடுத்து அந்த அம்மாவின் வாயில் ஊற்றுவதுபோல நீர் வார்த்தேன்.
“சந்தோஷமா?" என்று மனதிற்குள் வினவினேன். “நிம்மதியாகப் போய் வா!" என்று கைகூப்பினேன். ஒரு பித்து நிலையில் கொஞ்சம் பேசினேன்.
“நான் இறக்கும்போது நீ வா. அடுத்த ஜென்மத்தில் ஒரே இடத்தில் பிறப்போம். ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டவராய், அறிந்து கொண்டவராய், ஏதோ ஒரு உறவாய் வாழ்வோம். பேசுவோம். சிரிப்போம். இந்த தகனத்தோடு உன் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. என் இறப்போடு என் வாழ்க்கை முடிந்துவிடாது. இது தொடர்கதை. முன்னம் வினைப்பயன். மாறிமாறி வந்துகொண்டிருக்கும்........
உன் தகனத்தினால் என் வினையின் ஒரு பகுதி அறுந்தது. நான் உன்னை தகனம் செய்ததால் உன் வினையின் ஒரு பகுதி அறுந்தது. எனவே இப்படி வினைகளை அறுத்து அறுத்து எறிந்து, எந்த எதிர்பார்ப்புமின்றி வாழ்ந்து நாம் உன்னதமான இடத்திற்குப் போகலாம்.’'
மனம் செயல்களை செய்யக்கூடாது. மனம் சாட்சியாக இருக்கவேண்டும். எந்த யோசனையும், எந்த திட்டமிடலும், எந்த உந்துதலும் இருக்கக்கூடாது.
உணவு கிடைத்ததா சாப்பிடு. மழை பெய்ததா குளி. செத்தாரைப்போல திரி என்று ஏதேனும் ஒரு ஜென்மத்தில் வாழ்க்கை நடக்கவேண்டும். உந்துதல் அற அற இப்படிப்பட்ட ஒரு ஜென்மம் கிடைக்கும்.
“அய்யா, உமக்கு என்ன பெயர்?.’' “எனக்கா, என்ன பெயர் தெரியவில்லையே....'’ என்று விழிக்கவேண்டும். இந்த நிலை ஒரு கனவா, என் கற்பனையா, ஒரு வெற்று ஆசையா. இப்படி வாழமுடியுமா?.
பெயர் அறுத்துப் போகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். கங்கைக்கரை சாதுக்களெல்லாம் பெயர் அறுத்தவர்கள் அல்ல. இது ஒரு ஸ்திதி. இதிலிருந்து இரண்டு மூன்று ஜென்மங்களுக்குப் பிறகு அவர்கள் பெயர் அறுத்த மனிதர்களாக வாழ்வார்கள்.
எவரும் இல்லாது கங்கைக் கரையில் கிடைத்ததை உண்டு வாழ்வதும் ஒரு அழகான இடம்தான்.
எங்கோ மயிலாப்பூரில் இரண்டு மனைவியரோடு வாழ்ந்து, இங்கே எவருக்கோ தகனம் செய்து கங்கைக் கரையில் உட்கார்ந்து கொண்டிருப்பதும் ஒரு அழகான இடம்தான். இது ஒரு ஜென்மம். இம்மாதிரி பல ஜென்மங்கள் தாண்டித்தான் நான் உன்னத நிலைக்குப் போக முடியும்.
அந்த தகனத்திற்குப் பிறகு நான் பல மணிநேரம் கங்கைக்கரை படியில் உட்கார்ந்திருந்தேன். வேறுவிதமாக நடிக்கிறேனோ என்ற எண்ணத்தை சோதித்துக் கொண்டேன்.
இல்லை என்று புரிந்துகொண்டேன். எங்கோ இருக்கின்ற வீட்டின்மீது பற்றும், இப்பொழுது இந்த இடத்தில் அமர்ந்திருக்கின்ற தனிமையும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றே. இது ஒரு வேலை. இது ஒரு பயிற்சி. இது ஒரு ஒர்க் ஷாப். இது ஒரு பள்ளிக்கூடம்!
எழுத்தாளர் திரு பாலகுமாரன்.
எழுத்துசித்தர்
எங்கே செல்கிறோம்?
நாம் பள்ளி சென்ற காலத்தில் அதிக அளவில் தொலைக்காட்சி காட்சிகள் கூட பார்த்தது இல்லை... வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் மட்டும் தான் ஒர...
-
கடந்த காலம் காணாமல் போனது எதிர்காலம் எதிர்பார்ப்பில் இருக்கிறது நிகழ்காலம் நிஜமாய் நிற்கிறது புன்னகை பூத்து புத்துணர்வுடன் எழுந்து வா......
-
இந்த நாள் மட்டுமல்லாது இனி வரும் எல்லா நாட்களிலும்... வெற்றி நமதே இப்போதில் இருந்து நேர்மறையாக (positive) சிந்தித்தால்! இனிய காலை வணக்...
-
கடவுளைத் தேடி…. ~~~~~~~~~~~~~ ஷவரில் தலை அலசி குளித்த உடம்பு, கங்கையில் இறங்கி கும்மாளம் போட்டது. பத்து பாக்கெட்டுகள் பிஸ்கெட் வாங்கி அதை...