சனி, 11 ஆகஸ்ட், 2018

பயணமும் அனுபவமும்

பயணக்குறிப்பு (Diary -)
----------------------------------------------
நீலகிரி மலையை நோக்கிய ஒரு இரண்டு நாள் பயணம். வழக்கமான சுற்றுலாவாக அல்ல இது உள்ளே உள்ளே பல கிராமங்களை நோக்கி செல்லும் அரிய வாய்ப்பு! மாதத்தில் ஒரு முறை எனக்கு கிடைத்த வாய்ப்பு.! மலையேறத்திணறிய வாகனங்களில் எங்களுடையதும் ஒன்று. என்னுடன் டிரைவர் தவிர சக பணியாளர் தோழி ஒருவரும் உடன் இருந்தார்., மேலே செல்லச்செல்ல காரின் கண்ணாடியை நன்கு இறக்கி விடுகிறேன்... ''போதும் மேடம் குளிர் ஜாஸ்தியாகிவிடும்,"என்று சொன்ன அந்த தோழியை குழந்தையைப் பார்ப்பது போல பார்த்து சிரித்துக்கொண்டேன்! வழிநெடுகிலும் யார் கண்ணிலும் அதிகம் பட்டுவிடாத காட்டுமலர்கள்.. கண்டும் காணாமல் போகச்சொல்லியது. வானளாவிய மரங்களோ... இன்னும் வளரவா... இல்லை வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு தளரவா என்று கேட்பது போல மெல்லிய தலையாட்டல்கள், எல்லாம் கடந்து உதகை பேருந்து நிலையம் முன்பாக வண்டியை நிறுத்தி விட்டு உண்மையான தேநீர் தேவைமிர்தமாய் இருந்தது. மிக குறைந்த சர்க்கரையில் பால் இல்லாமல் ஒரு துவர்ப்பும், சூடுமாக பருகும் என் உச்சந்தலையில் பூ பூக்க செய்தது! இன்னும் உள்ளே உள்ளே செல்கிறோம்.. பல வீடுகளை நோக்கிய பயணமிது.. ஆங்காங்கே இந்நிறுவனத்தின் முகவர் இருப்பார்கள் அவர்களை அந்தந்த பகுதியில் சந்தித்து அவர்களின் இலக்கு பற்றி விவாதித்து அவர்கள் உறவு /நட்பு வட்டத்தை சந்தித்து சேமிக்க வைக்க வேண்டும். அப்படியாக பதினைந்து பேரை சந்திக்க திட்டமிட்டு கடைசியில் 7பேரை சந்தித்து முடிக்க இரவு 9மணியாகிவிட்டது. அசதி அதிகமாகிவிட்டது! இரவு தங்கலுக்கு அங்கேயே ஒரு சகபணியாளர் தோழி வீட்டிற்கு சென்றோம். பனியில் பற்கள் தட்டச்சு செய்கிறது... எப்படியெல்லாம்மோ இறுக்கம் காட்டி பார்க்கிறேன்... மீண்டும் தோற்கிறேன் இயற்கை அன்னையிடம்!
   மனிதர்கள் அத்தனை எதார்த்தவாதிகள், அத்தனை பாசக்காரர்கள் எங்கு சென்றாலும் அன்பான உபசரிப்பு மிகவும் ஏழ்மையில் இருந்தாலும் பர்னிச்சர் வசதிகளை தாராளமாக வைத்துக்கொண்டிருந்தார்கள், குளிரில் தரையில் உட்காருதல் சௌகர்யமல்ல ஆதலால்!. ஒரு மெல்லிய இருட்டு எல்லோர் வீட்டிலுமே உணர்ந்தேன்.., காரணம் மஞ்சள் நிற குண்டு பல்பு! ஏன்... ட்யூப்லைட் போடலாமே என்றேன்... இல்லை இது கொஞ்சம் சூடு தருகிறது என்றார்கள்!
    சீசனுக்கான வியாபாரிகள் காத்திருக்கிறார்கள், அங்கு சுற்றிப்பார்க்க வருபவர்களை Guest என்றுதான் சொல்கிறார்கள், தோழியின் வீட்டில் உறங்குவதற்கு நல்ல ஏற்பாடு செய்து தந்தார்கள்.
விடியலில் காற்றும் மழையுமாக இருந்தது என்னால் கட்டிலை விட்டு கீழே இறங்க முடியுமா என்பதே பெரும் சவாலாக இருந்தது. யாருமே எழுந்திருத்திருக்க மாட்டார்கள், இந்நேரத்தில் இங்கே 6மணிக்கு எழுந்த அதிபுத்திசாலி என அசட்டுத்தனமாக நினைக்கிறேன், ஆனால் அந்த ஊர்க்கார தோழி எழுந்து எங்களுக்கு வெந்நீர் போட்டுவிட்டு சூடாக தேநீர் வைத்துவிட்டு, அன்றைய நாளில் எங்கு செல்வது என்பதை குறித்த விபரங்களை ஒரு தாளில் எழுதிக்கொண்டு இருந்தார். எனக்கோ ஆச்சரியம்!வெளியே சென்றால் அங்கே பெரும்பாலானோர் வீடுகளில் பூந்தோட்டம் காண முடிந்தது! தெருவில் நடந்து சென்ற அனைவரும் எங்களைப்பற்றிய விசாரணைகளை (plains இல இருந்து வந்திருக்கிறார்களா...... எங்கள் முகமே காட்டிக்கொடுத்து விடுமே.....) தோழியிடம் கேட்டு விட்டு "நம்ப வீட்டுக்கு வாங்கோ" என்று அன்பான அழைப்பை உதிர்த்தார்கள்.,
   அந்த மழையிலும், பனியிலும் அவர்கள் பணியை செவ்வனே செய்கிறார்கள், எனக்கோ என் சோம்பேறி மூளையின் கண்கள் விசாலமாக திறக்கின்றன!! அன்றாட வாழ்வே பெரும் சவால்தான் அங்கே..... 'இத்தனை பேருந்து தான் வரும் இத்தனை மணிக்குத்தான் வரும்' இன்னும் பல கிராமங்களில் பயணங்கள் பெரும் சவாலாகத்தான் இருக்கிறது.
நாம் சமவெளியில் இருப்பது போல சட்டென்று கிளம்பி ஒரு மருத்துவமனையை அடைய கூட சிரமம் இருக்கிறது, அவ்வப்போது இயற்கை தாயின் பொறுக்க முடியாத சீற்றங்களில் சிக்கி வெளியேறுகிறார்கள்............ (ரொம்ப கஷ்டம் சுருக்கி விட்டேன்) ஆனால் இவற்றை மிகச்சாதாரணமாக கடந்து செல்கிறார்கள்....
நாமோ இங்கே சமவெளியில் இருந்து 5நிமிடத்திற்கு ஒரு பேருந்து, வாகன வசதிகள் இருந்தும் பெரிய முயற்சிகள் எடுக்கத்தவறி... நேர விரயம் செய்கிறோம்...... கிடைத்த இத்தனை வாய்ப்புகளுக்கும் பகவானிடம் நன்றி செல்ல மறு(ற)க்கிறோம்!........... சுகமான குளியல், கிளம்புகிறோம்,
குண்டு அரிசி, சூடான சாதம் பீட்ரூட் சாம்பார் (இங்கு தான் தெரிந்து கொண்டேன் பீட்ரூட் பொரியலுக்கு மட்டுமல்ல... ஹா ஹா ஒரு ஞானம்!) காரம் சேர்க்கப்பட்ட உணவு! "முட்டி வலிக்காது மேடம்.... இங்கே நடக்குறதுக்கு தெம்பு வேணுமில்லே..... சாப்டுங்கோ"... இந்த அன்பான உபசரணை காரம் மறந்து உண்ணச்செய்தது! (கண்களில் நீர்....!!! அன்பின் நெகிழ்வால்)
எல்லாரையும் சந்தித்துவிட்டு மேலும் கீழுமான வீடுகளை கால்களாலே கடந்து களைப்பேறிய உடலும், உண்மை அன்பர்களை தரிசித்த மனமுமாய் விடைபெறுகிறேன்.... எனக்கே தெரியாமல் காரில் கூடை கூடையாய் காரட்டுகள்!! டிரைவரை பார்த்தால் அவர் பதறிப்போய் வெளியே நிற்பவர்களை பார்க்கிறார், "சொன்னா வேணாம்ன்னு சொல்லிடுவிங்கோ.... அன்பா தர்றோம் புது காய்கள்.... வீட்டுக்கு கொண்டுபோங்கோ..... பாப்பா, சாரு, அம்மா எல்லாரையும் விசாரிச்சம்முன்னு சொல்லுங்கோ... அடுத்து சுத்திப்பாக்க சீசனுக்கு குடும்பத்தோட வந்துருங்க... வெளியே தங்கக்கூடாது"  என்று சொல்லி வழியனுப்பிவைத்தவர்கள்... புதியவர்களா இவர்கள்?! ஒரு நாள் பழக்கத்தில் இத்தனை அன்பை கொட்டுகிறார்களே.... இவர்கள் பிறவிகள் தோறும் பல பெயர்களில் என்னுடன் வாழ்ந்திருக்கக்கூடும், நினைத்தவாறே வண்டி கிளம்புகிறது.....
"சிந்தை மிகு மகுடி முன்னாலே நாகத்தை போல எந்தன் மனம் ஆடக்கண்டேன் இன்பத்தினாலே "...... பாடலை சற்று சப்தம் அதிகம் வைத்தபடி உருள்கிறது வண்டி!
வீட்டிற்கு வந்து அக்கம்பக்கத்தில் பிரித்து கொடுத்தது போக சமைத்து ருசித்த காரட் இன்னும் இனிக்கிறது.................. (தொடர்வேன்) இப்படிக்கு உங்கள் தோழி வி.சாந்தி

வியாழன், 12 ஜூலை, 2018

நிம்மதி கவிதை

இது கிடைத்தால் போதுமென்றே
ஒரு நினைப்பு....
இருந்து கொண்டேயிருக்கிறது கிடைக்கும் வரை
கிடைத்த பின்னும் தொடர்கின்றது
மீண்டும் ஒன்று
இது கிடைத்தால் போதும்!!
இதில் நிம்மதி கிடைப்பதும் இல்லை கிடைக்கப்போவதும் இல்லை

📝 வி.சாந்தி

வியாழன், 7 ஜூன், 2018

ஆன்மீக கவிதை

ஆன்மிகம் விளக்கம்

#கஜேந்திரமோட்சம்
எழுத்துச் சித்தர்" − "பாலகுமாரன் பதில்"

உங்கள் மகள் ஸ்ரீ கௌரி கஜேந்திர மோட்சம் கதையை நீங்கள் சொன்னவுடன் 'எதற்கு ஸ்வாமி முதலையை வெட்டிக் கொன்றார்? இரண்டு பேரையும் சண்டை போடவேண்டாம் என்று விலக்கி விட்டிருக்கலாமே?' என்று தன் சிறு வயதில் சொன்னதாக எழுதியதைப் படித்திருக்கிறேன். உண்மையில் கஜேந்திர மோட்சத்தின் தத்துவம் என்ன?

கஜேந்திர மோட்சத்தைப் பற்றி வெகுநாள் முன்பே நான் யோசித்து தெளிவாக ஒரு விடையை மனதில் வைத்திருந்தேன். எவரிடமும் அதைப்பற்றி பகிர்ந்து கொள்வதில்லை.

அதைப் பகிர்ந்து கொள்கிற மாதிரி எனக்கு எவரும் கிடைக்கவில்லை. நீங்கள் கேட்டதும் எனக்கு இதை வெளியே சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.

உங்களுக்குத் தெரியுமல்லவா? உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆஞ்ஞை அதற்கு மேலாக சகஸ்ரஹாரம் என்ற நிலை தலைக்கு மேலே இருக்கிறது. அது கடவுளுடைய நெருக்கத்திற்குப் போன நிலை. அதை விட்டுவிடுவோம்.

கீழே மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம் என்ற மூன்றும் மனிதனுடைய உடம்போடு சம்பந்தப்பட்டவை. மூலாதாரத்தின் சக்தி உங்களை, உங்கள் நாடிகளை இழுத்துப் பிடித்து வைத்து உங்களை உயிர்ப்போடு இருக்க வைக்கிறது. நீங்கள் நடமாடவும், பேசவும், புரிந்துகொள்ளவும் உண்டான பலத்தின் மூலம் அங்குதான் இருக்கிறது.

அடுத்தது சுவாதிஷ்டானம். இது உங்கள் குறி உள்ள இடத்தில் இருக்கிறது. வம்ச விருத்திக்காக, உங்களுக்கு குழந்தைகள் பிறப்பதற்காக, போகத்தை அனுபவிக்க பலம் தரும் இடம் அது.

அதற்கு மேல் இருப்பது மணிபூரகம். உணவு நன்கு உண்டு செரிமானம் ஆனால்தான் நீங்கள் போகத்தை அனுபவிக்க முடியும். உணவு மலக்குடலில் தங்கி வெளியே போனால்தான் உங்களால் நன்றாக பேசிச் சிரித்து, ஜீவித்து இருக்க முடியும்.

மணிபூரகத்தின் வேலை ஒரு அக்னியியை ஏற்படுத்தி வருகின்ற உணவுகளை தகித்து, அதனுடைய ஜீரண சக்தியை உடம்புக்குள் அனுப்பி சக்கையை வெளியேற்றும். இந்த மூன்றும் ஒரு தனிக் குழுவாக இருக்கின்றன.

அனாகதம், கடவுள் என்ற, பிரபஞ்சம் என்ற, அல்லது இயற்கை என்ற, அல்லது தான் என்கின்ற ஒரு நிலையை கண்டுபிடிக்கின்ற, தேடுகின்ற இடமாக, மனமாக இருக்கிறது. அதற்கு மேல் இருப்பது விசுத்தி.

அந்த விசுத்தியில்தான் மனம் இழுபட்டு ஒரு புள்ளியில் நின்று 'அதோ அதோ' என்று கதறியபடி கடவுளை நோக்கிப் போகவேண்டிய சத்தத்தை உண்டு பண்ணுகிறது. வேதங்கள் அங்கிருந்துதான் கிளம்பின. பரவச நிலையில் அங்கிருந்துதான் எல்லாவித சொற்களும் வெளியே வந்தன.

ஆஞ்ஞை என்பது அந்த சத்தம் தாண்டி இருக்கின்ற அமைதியை உள்வாங்கிக்கொண்டு மிக உறுதியாக கடவுளுக்கு நெருக்கமாக, கடவுளைக் காணுகின்ற ஆவலோடு கம்பீரமாக இருக்கின்ற இடம். அதிலிருந்து கிளம்பி சகஸ்ரஹாரம் தொடுகிறபோது கடவுளோடு தொடர்பு ஏற்படுகிறது.

கடவுள், இயற்கை, பிரபஞ்சம், ஆத்மா என்கிற எல்லா விஷயங்களும் ஒன்றே. கீழே இருக்கிற சுவாதிஷ்டானம், மணிபூரகம், மூலாதாரம் இந்த மூன்றும் உங்களை இந்த பூமியிலிருக்கும் சுகங்களை நோக்கி இழுக்க முயற்சிக்கின்றன.

இந்த மூன்றும் முதலை என்று உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது. சேற்றில் இருக்கின்ற முதலை, மிகப் பலம் பொருந்திய முதலை. நீரில் இருக்கின்ற முதலைக்கு வலு அதிகம். அது பெரிய யானையை புரட்டிப் போட்டு அடித்துக் கொன்றுவிடும்.

யானை அதிலிருந்து விடுபடவே முடியாது. யானை என்பது இங்கே அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை. இவையெல்லாம் கடவுளைத் தேடுகின்ற உயர்நிலையாக உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது.

உயர்நிலையில் இருக்கின்ற ஞானியை கீழ் நிலையில் இருக்கின்ற ஆசாபாசங்கள், பெண் ஆசை, இது வேண்டும் அது வேண்டும் என்ற எண்ணங்கள், சொத்து சேர்க்கின்ற மனோ பாவங்கள், அதற்குண்டான துரோகச் செயல்களை, கேவலங்களை, உத்தியை அந்த முதலை ஏற்படுத்துகிறது.

வயிற்றுக்குச் செல்லும் உணவு, உணவால் ஏற்படுகின்ற திமிர், அந்தத் திமிரால் ஏற்படுகின்ற அகங்காரம் இவையெல்லாம் இந்த மூன்று விஷயங்களோடு தொடர்புடையவை.

நான் என்று மூலாதாரம் நிற்க வைக்க, அதை செயலாக்குகின்ற திமிராக சுவாதிஷ்டானம் இயங்க, மணிபூரகம் அதற்குண்டான சக்தியை அவற்றுக்குக் கொடுக்க, அந்தத் திமிர் உச்சகட்ட நிலையை அடைகிறது.

இந்தத் திமிரோடு உள்ள மனிதர்கள் அனைவரும் அந்த மூன்று சக்கரங்களிலும் மிக உன்னதமாக இருக்கிறார்கள். அவை முதலையாகி அவர்களிடம் இருக்கின்றன.

மனம் அனாகதம் தொட்டவுடன், அனாகதம் மலர்ந்தவுடன் உங்களுக்குள் இருக்கின்ற மனோநிலை இது சரியில்லையே நாம் வேறுபக்கம் போகவேண்டுமே என்று நிமிர்கிறது.

எத்தனை பொய்கள் சொல்கிறோம், எத்தனை அபத்தங்கள் செய்கிறோம், எத்தனை துரோகங்கள் செய்கிறோம், எவ்வளவு பொறாமை கொள்கிறோம் என்ற எண்ணங்கள் வர, மனம் குவிந்து கடவுளை நோக்கி ஆடுகிறது, பாடுகிறது, பேசுகிறது, உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கித் தவிக்கிறது.

தவிப்பின் உச்சியில் தொண்டைக்குழியில் அதாவது விசுத்தியில் பலமான சத்தம், சொற்களற்ற சப்தம் எழுகிறது. அலறலாயும் ஏற்படுகிறது. விக்கி விக்கி அழுகிறது. அந்த அழுகை தாண்டி ஆஞ்ஞையில் அதாவது நெற்றியின் நடுவில் மனம் வியக்க அமைதிப்படுகிறது.

யானை என்ற இந்த மூன்றையும் காப்பாற்றுவதற்காக, முதலை என்ற அடுத்த மூன்றையும் கட்டி வைப்பதற்காக, கீழே உள்ள மூன்றும் இழுப்பின் மேலே உள்ள மூன்றும் சரியாகச் செயல்படாது என்று சகஸ்ரஹாரத்தின் மேல் இருந்த அந்த பிரபஞ்ச சக்தி, அந்தக் கடவுள் சக்தி, விஷ்ணு என்கிறவர் தன்னுடைய சக்கரத்தால் அந்த முதலையை அழிக்கிறார்.

கீழ் மூன்று விஷயங்களையும் தகர்க்கிறார். காமத்தை அழிக்கிறார். கோபத்தை அழிக்கிறார். பொறாமை பொய்யை அழிக்கிறார். நான் என்ற அகங்காரத்தை அழிக்கிறார். முதலை இறந்துபோக யானை கடவுளை வாழ்த்திக்கொண்டு போகிறது.

அந்தத் தாமரை என்ன? அதுதான் சகஸ்ரஹாரம். ஆயிரம் இதழ்கள் கொண்ட அந்தத் தாமரை மலர்ந்து இறைவனை நோக்கி, பிரபஞ்சத்தை நோக்கி, சக்தியை நோக்கி நிற்க, அந்த சக்தியினுடைய தொடல், அந்த சக்கரத்தினுடைய தொடல், கடவுளுடைய தொடல் திடீரென்று ஏற்பட்டு உங்களை புனிதமாக்கி விடுகிறது. உங்களை மனித ரூபத்திலிருந்து விலக்கி விடுகிறது

நீங்கள் உணவிலிருந்தும், பல ஆசைகளிலிருந்தும் விடுபட்டு விடுகிறீர்கள். இதுதான் முதலையும், யானையும் கொண்ட விஷயம். கடவுளுடைய தொடுதலைத்தான், ஏங்கினால் கடவுள் வருவார் என்ற நம்பிக்கையைத்தான் இந்த குண்டலினி அடுக்கு மூலம் சொல்கிறது.

குண்டலினி நகர நகர, சகஸ்ரஹாரம் தொட, இந்தக் கடவுளுடைய நெருக்கம், அண்மை, தெளிவு ஏற்பட்டுவிடும். அதற்கு மற்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய இந்த மூன்றும் செயல்பட வேண்டியது அவசியம். அனாகதத்தில் மனம் லயிக்க வேண்டியது அவசியம். இது மிக மிகப் பெரிய விஷயம். இவ்வளவுதான் இப்போதைக்குச் சொல்ல முடியும்.

ஞாயிறு, 3 ஜூன், 2018

தெளிவு

இமைகளை தாழிட்டால்....
எனக்கே நான் ஒரு புத்தகம்.,!
விழிப்புணர்வுடன் நோக்கினால்.....
உலகே ஒரு நூலகம்!

-வி.சாந்தி.

எங்கே செல்கிறோம்?

நாம் பள்ளி சென்ற காலத்தில் அதிக அளவில் தொலைக்காட்சி காட்சிகள் கூட பார்த்தது இல்லை... வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் மட்டும் தான் ஒர...